சென்னை: தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் நிறுவுவது தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள், கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றின் பெயர்ப் பலகைகளில் தமிழ் முதன்மையாக இடம் பெற வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“தமிழைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் தத்தம் தாய்மொழிகளிலும் 5:3:2 என்ற வீதத்தில் பெயர்ப் பலகைகள் அமையப் பெற வேண்டும்.
“தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப்பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. எனவே வணிகர் சங்கங்கள் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர்ப் பலகை வைக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டும்,” என்றார் அமைச்சர் சாமிநாதன்.
இத்தகைய நடவடிக்கையின் மூலம் பெயர்ப் பலகைகளைத் தமிழில் மாற்றி பாமர மக்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து நகரங்களிலும் இதனைச் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

