முதன்முறையாக உள்நாட்டிலேயே தயாராகும் ஸ்மார்ட் வெடிகுண்டு: சென்னை ஐஐடி உருவாக்க உள்ளது

1 mins read
ad310e5a-f185-4f73-a0cc-4321f0db5128
ஸ்மார்ட் வெடிகுண்டுகளை பீரங்கிகளில் பயன்படுத்த இயலும். - படம்: ஊடகம்

சென்னை: நாட்டின் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களில் ஒன்றான சென்னை ஐஐடியின் பேராசிரியர்கள் ஸ்மார்ட் வெடிகுண்டுகளைத் தயாரிக்கும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய தற்காப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும் நிறுவனமும் பேராசிரியர்களுடன் இணைந்துள்ளது. இந்திய அளவில் ஸ்மார்ட் வெடிகுண்டுகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் முதல் முயற்சி இதுவாகும்.

இந்த வகை வெடிகுண்டுகளை பீரங்கிகளில் பயன்படுத்த இயலும். ‘மியூனிஷன்ஸ் இந்தியா’ என்ற அந்நிறுவனம் இந்தியாவின் முப்படைகளுக்கும் துணை ராணுவப் படைக்கும் தேவையான பல்வேறு வெடிபொருள்களைத் தயாரிப்பதுடன் ஆராய்ச்சி, மேம்பாடு, தொழில்நுட்பம், வணிகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருவதாக தினகரன் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஸ்மார்ட் வெடிகுண்டுகளைத் தயாரிக்க உள்ளது இந்நிறுவனம்.

இதுநாள் வரை பீரங்கிகள் மூலம் இலக்குகளைத் தாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எட்டு முதல் 38 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து பீரங்கியின் மூலம் இலக்குகளைக் குறிவைத்தால் அவை 500 மீட்டர் பிழையோடு தாக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.

“இந்த பிழை தூரத்தைக் குறைக்கவே ஸ்மார்ட் வெடிகுண்டுகள் பயன்படுகின்றன. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய குண்டுகள் பயன்பாட்டில் உள்ளன.

“சரியான இலக்கைச் சென்றடைவதற்கான மின்னிலக்க சமிக்ஞைகளை (சிக்னல்களை) பயன்படுத்துவதுதான் ஸ்மார்ட் வெடிகுண்டுகளின் முதல் வேலை,” என்று தற்காப்பு அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பாதுகாப்பு அமைச்சு சார்ந்த நிறுவனத்துடன் இணைந்து இந்த நவீன வெடிகுண்டுகளை சென்னையில் இயங்கும் ஐஐடியின் பேராசிரியர்கள் உருவாக்க உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்