சென்னை: தனியார் பள்ளிகளுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக சென்னையில் வியாழக்கிழமை பதற்றம் நிலவியது.
மிரட்டல் விடுக்கப்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர் உடனடியாக பள்ளிக்கு விரைந்தனர்.
இதனால் பள்ளிகளின் வாயிற்பகுதியில் ஏராளமானோர் குவிந்திருப்பதைக் காண முடிந்தது. சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஒருவர், தனியார் பள்ளிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தார்.
இன்னும் சற்று நேரத்தில் அக்குண்டுகள் வெடித்துச் சிதறும் என கூறிவிட்டு அந்த மர்மநபர் இணைப்பைத் துண்டித்து விட்டார். இதையடுத்து மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியோடு காவல் துறை பள்ளிகளில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது.
இதேபோல் பிப்ரவரி 2ஆம் தேதி பத்துக்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அதன் காரணமாக மாணவர்கள் பள்ளிகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.
மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.