புதுடெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கான தமிழகத் தொகுதிகளில் இண்டியா கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும் என்று இந்தியா டுடே இதழின், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாகவும், இந்த முறையும் மோடியே பிரதமராவார் என்றும் பாஜகவினர் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இந்நிலையில் ‘இந்தியா டுடே’ குழுமம் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் நடத்தியுள்ளது. இதில் பல்வேறு தரப்பட்ட 35,801 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் வரும் மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களிலும் மாபெரும் வெற்றிபெறும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இதர கூட்டணிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், இண்டியா கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி 15 விழுக்காடு வாக்குகளையும், இதர கூட்டணிகள் 38 விழுக்காடு வாக்குகளையும் பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, மக்களவைத் தேர்தலில் பாஜக தென் மாநிலங்களில் மட்டும் 27 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக ‘டைம்ஸ் நவ்’ நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதேபோல் ‘டைம்ஸ் நவ்’ நடத்திய கருத்துக் கணிப்பில், தெலுங்கானாவிலும் தமிழகத்திலும் பாஜக தனது வெற்றிக்கணக்கைத் தொடங்கும் வாய்ப்புள்ளதாக அதன் முடிவுகள் கூறுகின்றன.
கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் பாஜக 21 இடங்களைக் கைப்பற்றும் என இக்கணிப்பு மேலும் தெரிவிக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு, தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி 36 இடங்களைப் பெறும் எனக் கூறுகிறது.
பாஜக ஒரு தொகுதியிலும் அதிமுக உள்ளிட்ட இதர கட்சிகள் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் கூட்டணி 19 தொகுதிகளிலும் தெலுங்கு தேசம் கட்சி ஆறு தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆந்திராவில் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கூறப்படும் நிலையில், தெலுங்கானாவில் அக்கட்சிக்கு ஐந்து இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு கூறுகிறது.
கேரளாவிலும் பாஜக தோல்வியைத் தழுவும் என்றும் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்தியா டுடே மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் முடிவுகள் வெளியாகி உள்ளன.
புதுடெல்லியில் மொத்தமுள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றும். தெலுங்கானாவில் அக்கட்சிக்கு ஐந்து இடங்களும் இண்டியா கூட்டணிக்கு ஒன்பது இடங்களும் கிடைக்கும்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில், திரிணாமூல் காங்கிரஸ் 22 தொகுதிகள், பாஜக கூட்டணி 18 தொகுதிகளைக் கைப்பற்றும்.
பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில், பாஜக கூட்டணி 32 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 8 இடங்களிலும் வெற்றி பெறும்.
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில், 70 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.
ஆக மொத்தத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி தெளிவான பெரும்பான்மை பலத்துடன் வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் நரேந்திர மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

