நீலகிரி: எதிர்வரும் 2040ஆம் ஆண்டில் இந்தியர் ஒருவர் நிலவில் கால் பதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகக் கூறியுள்ளார் ‘சந்திரயான் 3’ திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்.
நீலகிரியில் நடைபெற்ற ‘விண்வெளியில் இந்தியா’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய விண்வெளி ஆய்வு மையம் அறிவியல் சார்ந்த செயற்கைக் கோள்களையும் விண்வெளிக்கு அனுப்பி வருகிறது என்றும் அவற்றின் மூலம் பெறப்படும் தகவல்கள் மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு பயனுள்ளதாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.
“விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வரும் 2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி நிறைவேற்றப்படும்.
“2040இல் நிலவில் இந்தியர் ஒருவர் கால் பதிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது,” என்றார் வீரமுத்துவேல்.
சந்திரயான்-3 செயற்கைக்கோள் லேண்டர், ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கியது என்று குறிப்பிட்ட அவர், அதன் ஆயுட்காலம் முடிவடைந்துவிட்டாலும் எந்த நோக்கத்துக்காக விண்ணில் செலுத்தப்பட்டதோ, அது முழுமையாக நிறைவேறி உள்ளது என்றார்.
“இந்த திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஆர்பிட்டர், நிலவின் சுற்றுவட்டப் பாதையிலிருந்து மீண்டும் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பக் கொண்டு வரப்பட்டது,” என்று வீரமுத்துவேல் மேலும் தெரிவித்தார்.

