உயிருக்குப் போராடும் முருகன்: நளினியின் கண்ணீர் வேண்டுகோள்

உயிருக்குப் போராடும் முருகன்: நளினியின் கண்ணீர் வேண்டுகோள்

1 mins read
07af2fc5-b456-44dd-80b9-e7c7e082cc5f
நளினி, முருகன். - படங்கள்: ஊடகம்

திருச்சி: உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் முருகனைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முருகனின் மனைவி நளினி கோரிக்கை விடுத்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன், திருச்சி சிறப்பு முகாமில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அவரது மனைவி நளினி கூறியுள்ளார்.

முருகனை காப்பாற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேலூர் சிறையைவிட திருச்சி சிறப்பு முகாம் கொடுமையாக உள்ளது என்றும் நளினி தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாமில் காவல்துறையினர் தங்களை சுதந்திரமாக இருக்க விடுவதில்லை என்று முருகன், ராபர்ட் பயாஸ் ஆகிய இருவரும் புகார் எழுப்பி உள்ளனர்.

தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, இருவரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர், திருச்சி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு தமது கணவர் உயிருக்குப் போராடுவதாக முருகனின் மனைவி நளினி கடிதம் வழி தெரிவித்துள்ளார்.

கடந்த 12 நாள்களாக தமது கணவர் எதுவும் சாப்பிடாமல், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சிறப்பு முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்படாததால், கணவரின் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படக்கூடும் என்றும் நளினி தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்