தமிழகத்தில் 27 இடங்களில் என்ஐஏ சோதனை: பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

தமிழகத்தில் 27 இடங்களில் என்ஐஏ சோதனை: பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

1 mins read
b590b0be-ddf9-41dc-a1d7-b08a82975bfa
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: கோவையில் கார் களில் பயன்படுத்தும் எரிவாயு உருளை வெடித்துச் சிதறிய வழக்கு தொடர்பில் மாநிலம் முழுவதும் தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.

மொத்தம் 27 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையின்போது பல்வேறு முக்கியமான ஆவணங்கள், மடிக்கணினி, கைப்பேசிக் கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே 2022 அக்டோபர் மாதம் காரில் கொண்டு செல்லப்பட்ட எரிவாயு உருளை திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அந்தக் காரை ஓட்டிவந்த ஜமேஷா முபின் (25 வயது) என்பவர் உயிரிழந்தார்.

இதையடுத்து நடைபெற்ற விசாரணையின்போது இவருக்குப் பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதும் கோவையில் கார் குண்டுகளை வெடிக்கச் செய்து பெரும் சேதங்களை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்ததும் தெரியவந்தது.

இதனால் இவ்வழக்கை தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்கத் தொடங்கியது. புலனாய்வு அதிகாரிகள் அடுத்தடுத்து 14 பேரை கைது செய்தனர்.

மேலும், அரபி மொழி கற்றுக்கொடுக்கும் தனியார் கல்லூரியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தொடர்பான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு மூளைச்சலவை செய்து ஆள்களை அனுப்புவது தொடர்பான விவரங்கள் அந்த ஆவணங்களில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பாக சனிக்கிழமையன்று சென்னை, நெல்லை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 27 இடங்களில் புலனாய்வு அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கிய சோதனை பல மணி நேரம் நீடித்ததாகத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்