சென்னை: செய்தியாளர் மீதான தாக்குதல் சம்பவத்தில் தொடர்புள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேச பிரபு. தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் செய்தியாளராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத சிலர் நேச பிரபு மீது தாக்குதல் நடத்தினர். இதனால் செய்தியாளர்கள் மத்தியில் கொந்தளிப்பு நிலவும் நிலையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
தன் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக குறிப்பிட்டு, உரிய பாதுகாப்பு வழங்குமாறு நேச பிரபு காவல் துறையில் மனு அளித்திருந்ததாகத் தெரிகிறது.
அதன் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளரை உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவ சிகிச்சைப் பெற்று வரும் நேச பிரபுவுக்கு செய்தியாளர் நலவாரியத்தில் இருந்து 3 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே செய்தியாளர் நேசபிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும் என அ.ம.மு.க. பொதுச் செயலாளார் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
தி.மு.க. அரசு ஊடக சுதந்திரத்திற்கு எதிராக செயல்படுவதாக தமிழக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ள வேண்டும் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


