சென்னை: 2024 மக்களவைத் தேர்தலுக்கான தமிழகத் தொகுதிகளில் இண்டியா கூட்டணியே 39 இடங்களிலும் வெல்லும் என்று இந்தியா டுடே இதழின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாகவும், இந்த முறையும் மோடியே பிரதமாவார் என்று பாஜகவினர் மத்தியில் கருத்து நிலவுகிறது.
இந்நிலையில் ‘இந்தியா டுடே’ குழுமம் சார்பில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் நடத்தியுள்ளது. இதில் பல்வேறு தரப்பட்ட 35,801 பேரிடம் கருத்துகளைக் கேட்டறிந்துள்ளது.
இந்த கருத்துக்கணிப்பில் வரும் மக்களவை தேர்தலில் இண்டியா கூட்டணி தமிழகத்தில் 39 இடங்களிலும் மாபெரும் வெற்றிபெறும் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் இதர கூட்டணிகள் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும், இண்டியா கூட்டணி 47 விழுக்காடு வாக்குகளையும், தேசிய ஜனநாயக கூட்டணி 15 விழுக்காடு வாக்குகளையும், இதர கூட்டணிகள் 38 விழுக்காடு வாக்குகளையும் பெறும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

