சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிகவுக்கு 14 மக்களவைத் தொகுதிகளையும் பின்னர் மாநிலங்களவையில் ஒரு தொகுதியும் ஒதுக்கும் கட்சியுடன் மட்டுமே கூட்டணி வைக்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
புதன்கிழமையன்று தேமுதிக மாவட்டச் செயலாளர்கள், கட்சி நிர்வாகிகளுடன் அவர் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்முறை மக்களவைத் தேர்தலில் தனித்துக் களம் காண வேண்டும் என்பதே பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களின் விருப்பமாக உள்ளது என்றார்.
“எங்களுக்கு தொகுதிகளின் எண்ணிக்கை முக்கியம். கொள்கை ஒத்துப்போகிறது என்பதற்காக ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்குவோம் என்றால் யாராவது ஒப்புக் கொள்வார்களா?
“தேமுதிகவின் கொள்கையை கட்சி தொடங்கியபோது தலைவர் விஜயகாந்த் தெளிவாக வரையறுத்து அறிவித்தார். அதன் அடிப்படையில் செயல்படுகிறோம்,” என்றார் தேமுதிக பொதுச் செயலாளரான பிரேமலதா.
கூட்டணி குறித்து இதுவரை அதிகாரபூர்வ மாகவோ மறைமுகமாகவோ யாரிடமும் பேசவில்லை என்றும் நிர்வாகிகள் கூறிய கருத்துகள் பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தேமுதிக நிர்வாகிகள் அதிமுகவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

