சென்னை: தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜி விலகியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக இந்து தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், அவரது கடிதம் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும் அதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளாக ஆளுநர் மாளிகை தரப்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது.
அலாக்கத்துறை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த சில மாதங்களாக சிறையில் உள்ள அவர், இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அமைச்சரவையில் நீடித்து வந்தார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை கைது செய்தது.
இந்த நடவடிக்கையை ஆளும் திமுக தரப்பு கடுமையாக எதிர்த்தது. மத்திய அரசு, மிரட்டல் அரசியலில் ஈடுபட்டுள்ளதாக திமுக தலைமை சாடியது.
தமக்குப் பிணை வழங்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
அவர் அமைச்சராக நீடித்தால் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறி பிணை மனுக்களுக்கு அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தமிழக அமைச்சரவையில் நியமிப்பது ஏன் என்று நீதிமன்றமும் கேள்வி எழுப்பியது.
அவர் அமைச்சராக பதவியில் நீடிப்பது தொடர்பாக பல்வேறு தொடர் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அப்பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் செந்தில் பாலாஜி.
கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் செந்தில் பாலாஜி. அச்சமயம் போக்குவரத்துக் கழகத்தில் பணி வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்து மோசடி செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு.

