சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்காக அரசியல்வாதிகளுக்கு பல கோடிக்கணக்கில் லஞ்சமாகப் பணம் கைமாறியது தொடர்பான வழக்கில், போலி நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது.
இதுதொடா்பாக அமலாக்கத்துறை திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், கே.எல்.பி. புராஜெக்ட்ஸ், லேண்ட்மார்க் குரூப், பின்னி லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் கடந்த 9ஆம் தேதி முதல் நடத்தப்பட்ட மூன்று நாள் சோதனையில், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகளுக்கு சட்ட விரோதமாக வழங்கப்பட்ட பணம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், வணிகம் தொடர்பான ஆவணங்கள், அசையும், அசையா சொத்துகளின் விபரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டும் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசியல்வாதிகள், அரசு உயா் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதன் மூலம் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டுமன்றி மதுபான வியாபாரத்துக்கும் சட்டவிரோத நடவடிக்கைக்கும் பயன்படுத்தியுள்ளனா்.
சட்டவிரோதமாக ரூ.280 கோடியை மெரீட்டியஸ் பரிமாற்றம் மூலம் பெற்றுள்ளனா். இந்த நிதி மூலமாகவே அந்த இடத்தைக் கைப்பற்றியுள்ளனா்.
இந்த விவகாரத்தில் எஸ்.நீலகண்டன் என்பவா் முக்கியப் பங்காற்றியுள்ளாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை பின்னி மில் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டியபோது கடந்த 2015 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகளுக்கு 50 கோடியே 86 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்த விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புக் காவலர்கள் அண்மையில் சோதனை நடத்திய நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளும் கடந்த 9ஆம் தேதி முதல் சோதனை நடத்தினர்.

