திருவாரூர்: திருவாரூரில் பணி முடிந்து சென்ற காவலர் ஒருவர், மீண்டும் கையில் குழந்தையுடன் போக்குவரத்தைச் சீர்செய்த காட்சி சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, அக்காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
திருவாரூரில் நகர சட்ட-ஒழுங்கு காவலராக பணியாற்றி வருபவர் மணிகண்டன். இவர் தனது பணியை முடித்துவிட்டு மனைவி, குழந்தையுடன் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் விளமல் பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது விளமல் கல்பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்தது. சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் ஒன்றுக்கொன்று தாறுமாறாக நின்றதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
வழக்கமாக இந்தப் பகுதியில் போக்குவரத்தைச் சரிசெய்வதற்காக இருக்கும் காவலர்கள் அங்கு இல்லாததால் போக்குவரத்துகள் நெரிசலில் சிக்கின. இதையடுத்து, கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கிய மணிகண்டன், சாலையின் இருபுறமும் அணிவகுந்து நின்ற வாகனங்களை ஒன்றன் பின் ஒன்றாக வரவவைத்து போக்குவரத்து நெரிசலைச் சரிசெய்தார்.
சாலையின் இருபுறமும் அவர் மாறி மாறிச் சென்று போக்குவரத்தை சரிசெய்த காட்சியானது தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

