சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த இரண்டு தனித் தீர்மானங்கள் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையையும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் மத்திய அரசு கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி இரு தீர்மானங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
தீர்மானங்களை முதல்வர் முன்மொழிந்த பினனர் அவற்றின் மீதான விவாதங்கள் நடைபெற்றன.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிரானது என்றார்.
“நாடாளுமன்றத் தேர்தலைக்கூட ஒரே நேரத்தில் நடத்த முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைத்து, மத்தியில் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து விட்டு தேர்தல் நடத்துவார்களா?
சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் பதவி விலகுவார்களா? என்று அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
எனவே, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று என்றும் அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்திற்கும், அரசியல் சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுதந்திரமான, நேர்மையான தேர்தலுக்கு முற்றிலும் எதிரானது என்றும் முதல்வர் ஸ்டாலின் சாடினார்.
தொடர்புடைய செய்திகள்
“ஒரே நேரத்தில் தேர்தல் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டமன்றங்களை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதும் அப்படி கலைப்பது அரசியல் சட்ட துரோகம் என்பதாலும் இந்த நடைமுறையை அனைவரும் எதிர்க்க வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
மற்ற கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் இரு தீர்மானங்களையும் ஆதரித்துப் பேசினர். இரு தீர்மானங்களையும் ஆதரிப்பதாக அதிமுகவும் தெரிவித்தது. இதையடுத்து அவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதற்கிடையே, வரும் 19ஆம் தேதி 2024-25ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். இதையடுத்து 20ஆம் தேதியன்று வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.