தஞ்சாவூர்: காதலர் தினம் கலாசார சீர்கேடு என்று சொல்லி இந்து அமைப்பினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சை பெரிய கோயிலுக்கு வரும் காதலர்களுக்குத் தாலி கட்டும் போராட்டத்தை இந்து அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
தஞ்சையில் உள்ள புகழ்பெற்ற பெருவுடையார் கோயிலுக்கு ஏராளமான பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை அளித்தனர். இவர்களில் ஏராளமான காதல் ஜோடிகளும் இருந்தனர்.
இங்கு வரும் காதல் ஜோடிகளுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைப்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் கையில் தாலியுடன் காத்திருந்தனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் தாலியுடன் வந்தவர்களை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
தாலியுடன் நின்றவர்களைப் பார்த்துவிட்டு காதல் ஜோடிகளும் தலைதப்பி ஓடினர்.
இந்த விஷயம் தெரியாமல் தஞ்சை பெரிய கோயிலுக்கு வந்த காதல் ஜோடிகளையும் காவலர்கள் அறிவுரை கூறி திருப்பி அனுப்பி வைத்ததாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

