நெல்லை: கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நெல்லை மாவட்டத்தில் 1,101 சிறுமிகளுக்குப் பிரசவங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைத் திருமணங்களைத் தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சட்டத்தை மீறி குழந்தை திருமணங்களுக்கு ஏற்பாடு செய்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 18 வயதிற்கு உட்பட்ட 1,101 பேருக்கு பிரசவங்கள் நடந்துள்ளன என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்பவர் நெல்லை மாவட்ட சுகாதாரப் பணித் துறையின் துணை இயக்குநரிடம் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான விவரங்களைக் கேட்டிருந்தார்.
அதற்கு, கடந்த 2021ஆம் ஆண்டு 444 சிறுமியருக்கு பிரசவமாகி உள்ளதாக துணை இயக்குநர் ராஜேந்திரன் பதில் அளித்துள்ளார். 2022ஆம் ஆண்டில் 383 சிறுமிகளுக்கும் 2023ல் 274 சிறுமிகளுக்கும் பிரசவம் நடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக அதிகமாக மேலப்பாளையம் பகுதியில் 82 பிரசவங்கள் நடந்துள்ளதாகவும் அவரது பதிலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

