ஸ்டாலின்: ஆளுநருக்கு கண்டனம், இபிஎஸ்ஸுக்கு அழைப்பு

2 mins read
6dd18750-9ecf-4e92-874f-ff89e9631883
சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலை உரையாற்றினார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது. ஒரு காலத்தில் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று முழங்கினோம். ஆனால், இன்று தெற்கு வளர்கிறது, வடக்குக்கும் சேர்த்து தெற்கே வாரி வழங்குகிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை காலை உரையாற்றினார். ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையை பாதியிலேயே புறக்கணித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் ரவியின் செயல் தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் செயல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். அரசியல் செய்யும் விதமாக சட்டமன்றத்தில் ஆளுநர் நடந்து கொண்டதாக நினைக்கத் தோன்றுகிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு 9% பொருளாதார பங்கை தமிழகம் தருகிறது. மின்னணு பொருள்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நமது வளர்ச்சியை பார்த்து இன எதிரிகளுக்கு கோபம் வருவதே சாதனை என்று அவர் கூறினார்.

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்த ஸ்டாலின், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை உள்நாட்டு ஊடகங்கள் மட்டுமல்லாமல் உலக நாளிதழ்களே பாராட்டி வருவதாகக் கூறினார்.

பெண்கள் உரிமை திட்டத்தால் பலர் பயனடைந்து வருகின்றனர். மேலும் மக்களுக்கு நன்மை தரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அரசு சாதனை படைத்து வருவதாக அவர் விவரித்தார்.

ஆட்சி பொறுப்பேற்ற 33 மாதங்கள் முன்னேற்றமான, சாதனை மாதங்களாகும். தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களில் 3வது இடத்திற்கு தமிழகம் முன்னேறியுள்ளது. பிற மாநிலங்களிலும் தமிழக திட்டங்களை செயல்படுத்துவதே திராவிட மாடல் அரசின் சாதனை. மக்களுக்கு நன்மை தரும் 10 விதமான சாதனைகளை படைத்துள்ளோம்.

மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியது ஆறுதல் அளிப்பதாகக் கூறிய ஸ்டாலின், திமுகவுடன் இணைந்து மத்திய அரசிடம் நிதி கேட்க குரல் கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை நிறுத்திவிட்டதாகவும், இதனால் தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் குறை கூறினார்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு புதிய சிறப்பு திட்டங்களை தருவதில்லை என்றும் தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையின் சோகக் கதையை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்றும் வேதனை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்