மாற்றுத்திறனாளிகள் கைது; சீமான், தினகரன், அன்புமணி கண்டனம்

2 mins read
db537681-3ada-4880-abc9-145cb9785916
சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்றோர். - படம்: இந்திய ஊடகம்

சென்னை: அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பார்வை மாற்றுத்திறனாளிகளை வலுக்கட்டாயமாக கைது செய்திருக்கும் காவல்துறையின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்துள்ளன.

அரசு வேலைவாய்ப்புகளில் 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் கடந்த 12ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோடம்பாக்கம் பாலத்தில் புதன்கிழமை காலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

பிப்ரவரி 15ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் பூந்தமல்லி சாலையில் திடீரென சாலை மறியலில் அவர்கள் ஈடுபட்டனர். சாலையில் படுத்து கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அங்கு விரைந்த காவல்துறையினர், அவர்களிடம் சமாதானமாக பேசி போராட்டத்தை கைவிடுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்து மறியலில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதையடுத்து காவல்துறையின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வேனில் ஏற்றினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வையற்றோர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வையற்றோர். - படம்: இந்திய ஊடகம்

இந்நடவடிக்கையைக் கண்டித்து அன்புமணி, சீமான், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையைக் கண்டித்த அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகள உடனடியாக நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித் தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் 1% இட ஒதுக்கீடும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் வலியுறுத்தியுள்ளார்.

பார்வை மாற்றுத்திறனாளிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பார்வை மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்று அவர் கூறியுள்ளார்.

Watch on YouTube
குறிப்புச் சொற்கள்