பெண் பயணிகளைப் பாதுகாக்க இளஞ்சிவப்புப் படை

2 mins read
0719937d-8989-4c7f-800d-5bcd4fa0c588
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக பெண் பாதுகாவலர்கள் அடங்கிய பிங்க் ஸ்குவாட் (PINK SQUAD) எனும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: மெட்ரோ ரயிலில் பெண் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இளஞ்சிவப்புப் படை (பிங்க் ஸ்குவாட்) தொடங்கப்பட்டு உள்ளது.

புதிய திட்டத்தைச் சென்னை, நந்தனத்தில் உள்ள மெட்ரோ தலைமையகத்தில் சென்னை மெட்ரோ நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ், தற்காப்புக் கலைகளில் தேர்ச்சி பெற்ற 23 பேர் அடங்கிய மகளிர் பாதுகாவலர்கள் குழுவானது மெட்ரோ ரயில் மற்றும் நிலையங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் பணியில் ஈடுபட உள்ளது.

இவர்கள் தற்காப்புக் கலைகளில் பிரவுன் பெல்ட் பெற்றவர்கள். பெண் பயணிகளின் பாதுகாப்பை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

மகளிர் பாதுகாவலர்களுக்குச் சிறப்பான எந்த அதிகாரமும் இல்லையென்றாலும் அவர்கள் காவலர்களிடம் ஒப்படைப்பார்கள்.

சில இடங்களில் மெட்ரோ ரயில்களில் சிசிடிவி நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தடுத்து தேவையைப் பொறுத்து மகளிர் பாதுகாவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்து மகளிர் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் சித்திக் கூறினார்.

சென்னையில் மெட்ரோ ரயில் இரு வழித்தடங்களில் தற்போது இயக்கப்படுகிறது. தினமும் சராசரியாக 3 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். மெட்ரோ ரயில் மற்றும் நிலையங்களில் அலுவலக நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ளது.

ஒவ்வொரு மெட்ரோ ரயிலிலும் 4 பெட்டிகள் உள்ளன. அதில் ஒரு பெட்டி பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் பெட்டியில் ஆண்கள் பயணிக்கக்கூடாது என அறிவிப்பு தொடர்ந்து இடம்பெற்றாலும், சிலர் தெரியாமலும் ஒரு சிலர் தெரிந்தும் அதில் பயணம் செய்வதால் பெண் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

குறிப்புச் சொற்கள்