மதுரை: தேர்தல் அதிகாரியைத் தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விடுதலை செய்யப்பட்டார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார் மு.க.அழகிரி.
அப்போது மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு முன்பு கூடியிருந்த திமுக தொண்டர்களுடன் சேர்ந்து அழகிரி வாக்கு சேகரித்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் அங்கு திடீரென வந்து சேர்ந்தார் மேலூர் உதவி தேர்தல் அதிகாரியான தாசில்தார் காளிமுத்து. மேலூரில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதாக தமக்கு தகவல் கிடைத்ததாக குறிப்பிட்ட அவர், வாக்குச் சேகரிப்பை காணொளியாக பதிவு செய்தார்.
இதனால் ஆவேசமடைந்த மு.க.அழகிரியும், அவரது ஆதரவாளர்களும் தாசில்தாரை தாக்கியதாக புகார் எழுந்தது. இதையடுத்து அழகிரி உள்ளிட்ட 21 பேர் மீது மதுரை காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
பல ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விசாரணையின்போது மு.க.அழகிரி உள்ளிட்டோர் தம்மை தாக்கவில்லை என தாசில்தார் காளிமுத்து தெரிவித்தார். அவர் பிறழ் சாட்சியாக மாறியதை அடுத்து மேலும் சிலர் பிறழ் சாட்சிகளாக மாறினர்.
இதையடுத்து அழகிரி உள்ளிட்ட 17 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

