தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகையிலைப் பொருள்கள் விற்பனை: மூன்று மாதங்களில் 6,500 கடைகளுக்கு ‘சீல்’

1 mins read
a781da63-22dd-4cea-ba2b-a2d91785c945
மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: மாநிலம் முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த புகாரின் பேரில் 6,500 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த மூன்று மாதங்களாக இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்துவதால் எத்தகைய உடல்நலப் பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பது குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் புற்றுநோய் பரிசோதனைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 54 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்கப்படும்.

தோல் பதனிடுதல், சாய தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்களுக்கு பரிசோதனை திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன், புகையிலைப் பொருள்களை பயன்படுத்துவதால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்பதை மக்கள் உணர வேண்டும் என வலியுறுத்தினார்

அதனால்தான் புகையிலைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை பாய்வதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகளை விற்பனை செய்வோர் மீதும் தமிழக காவல்துறை கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்