அடிபட்ட பாம்புக்கு 12 தையல்கள் போட்டு சிகிச்சை: பிடித்தவருக்குப் பாராட்டு

அடிபட்ட பாம்புக்கு 12 தையல்கள் போட்டு சிகிச்சை: பிடித்தவருக்குப் பாராட்டு

1 mins read
bbc9a26c-f649-4b3e-85c2-37a0f5a845e7
உயிருக்குப் போராடிய பாம்புக்கு 12 தையல்கள் போடப்பட்டதில் அது உயிர் பிழைத்தது. - படம்: ஊடகம்

மதுரை: கண்ணாடி விரியன் வகையைச் சேர்ந்த பாம்புக்கு 12 தையல்கள் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆனது.

மதுரையைச் சேர்ந்த 40 வயதான சகாதேவன் பாம்புகளை கைகளால் பிடிக்கும் திறமை உள்ளவர். இருசக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் நிபுணராக வேலை பார்க்கிறார்.

இந்நிலையில் சனிக்கிழமை இரவு திருநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கொடிய நச்சுத் தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு ஒன்றைப் பிடித்தார் சகாதேவன்.

அச்சமயம் பிடிபட்ட பாம்பின் வயிற்றுப்பகுதியில் பெரிய காயம் இருப்பதையும் அது உயிருக்குப் போராடுவதையும் கண்டார். இதையடுத்து பழங்காநத்தம் கால்நடை மருத்துவமனைக்கு அவர் பாம்பைக் கொண்டு செல்ல, உடனடியாக அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

வயிற்றில் ஏற்பட்ட காயத்திற்கு 12 தையல்கள் போடப்பட்டன. ஒரு மணி நேர சிகிச்சைக்குப் பின்னர் அந்தப் பாம்புக்கு மயக்கம் தெளிந்தது. அதன் பின்னர் வனத்துறை அதிகாரிகள் அதை வனப்பகுதிக்குக் கொண்டு சென்று விடுவித்தனர்.

உயிருக்குப் போராடிய பாம்பை காப்பாற்றிய சகாதேவனுக்கும் மருத்துவ குழுவினருக்கும் சமூக ஊடகங்களில் ஏராளமானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
பாம்புசிகிச்சை