சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் மாநிலத் தலைவரை மாற்றி உள்ளது காங்கிரஸ் கட்சித் தலைமை.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக கே.எஸ்.அழகிரி செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே அவர் மாற்றப்படுவார் என ஆரூடத் தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருந்தன.
இந்நிலையில் அவர் மாற்றப்பட்டு, செல்வப்பெருந்தகை புதிய தலைவராக நியமிக்கப்படுகிறார் என காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் வேணுகோபால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் செல்வப்பெருந்தகை. அதற்கு முன்பு திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகச் செயல்பட்டு வந்தார்.
2006ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர் தலில் வி.சி.க சார்பாக மங்களூரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், கட்சித் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் வி.சி.கவில் இருந்து விலகினார்.
2008ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் இணைந்து, அதன் மாநிலத் தலைவராகவும் பொறுப்பேற்ற செல்வப் பெருந்தகையால் நீண்ட காலம் அக்கட்சியில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அதன் பிறகே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
தொடர்புடைய செய்திகள்
2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் செல்வப்பெருந்தகை. அதன் பின்னர் சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது அவர் மாநில காங்கிரஸ் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தமிழக காங்கிரசின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
“இணைந்து பயணிப்போம், இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

