நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கப்படும் என இலங்கைக்கான இந்தியத் தூதர் சந்தோஸ் ஜா தெரிவித்துள்ளார்.
தலைமன்னார், ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சந்தோஸ் ஜா, காங்கேசன் துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்பகுதிக்கு விஜயம் செய்தபோது, இரு நாடுகளுக்கிடையிலான கப்பல் சேவைகளை வேகமாக ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையின் - காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கப்பட்டது.
பின்னர் இச்சேவை நிறுத்திவைக்கப்படுவதும் ஆரம்பிக்கப்படுவதும் மீண்டும் நிறுத்தி வைக்கப்படுவதுமாக இருந்தது. இந்நிலையில் சந்தோஸ் ஜா இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.