அடுத்து வரும் 100 நாள்களும் முக்கியமானவை: ஸ்டாலின்

அடுத்து வரும் 100 நாள்களும் முக்கியமானவை: ஸ்டாலின்

2 mins read
7a47d470-b9e5-483c-afdc-55abdcff6b20
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: அடுத்து வரும் நூறு நாள்களும் மிக முக்கியமானவை என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியை நோக்கிய பயணத்தின்போது திமுகவினர் கடமை உணர்வோடும் ஓய்வின்றியும் உழைத்து ‘இண்டியா கூட்டணி’யை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் களப்பணிகளைத் தொடங்கிவிட்டன.

திமுக இடம்பெற்றுள்ள இண்டியா கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில் சமூக ஊடகத்தில் தேர்தல் குறித்து பதிவிட்டுள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அதில் ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ என்பதை உறுதி செய்யும் விதமாக மாநிலம் முழுவதும் மிக எழுச்சியோடு பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடந்தேறியுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் திமுகவினர் நடத்தி வரும் பொதுக்கூட்டங்களை அவர் சுட்டிக்காட்டி பாராட்டி உள்ளார்.

கூட்டங்களை வெற்றிகரமாக ஒருங்கிணைத்த மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு தெரிவிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

“2024 நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை நோக்கிய நமது பயணத்தில் அடுத்து வரும் நூறு நாள்களும் மிக முக்கியமானவை. கடமை உணர்வோடு ஓய்வின்றி உழைப்போம். இண்டியா கூட்டணியை வெற்றி பெறச் செய்வோம்,” என்று மு.க.ஸ்டாலின் தமது சமூக ஊடகப்பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை தொடர்பாகவும் அவர் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

தடைகளைத் தாண்டி, வளர்ச்சியை நோக்கி தமிழகம் சீர்மிகு பயணத்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

“பொதுவாக நிதிநிலை அறிக்கை என்பது நிதியை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும். சமூக நீதியை மையமாகக் கொண்டு தயாரான இந்த அறிக்கை அனைத்து மக்களுக்குமான சம நீதியையும் சம நிதியையும் வழங்கி தமிழகத்தில் சீரான வளர்ச்சிக்கான அதிவேக பயணத்தை உறுதி செய்துள்ளது,” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொருளியலுக்கு ஒன்பது விழுக்காடு பங்கைத் தருவதாக தமிழகப் பொருளியல் வளமாக உள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது என்றும் அனைத்து துறைகளிலும் முன்னேறி வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்