சென்னை: தமிழக சட்டமன்றத்தில் 2024-2025ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் செவ்வாய்க்கிழமை (20-02-24) தாக்கல் செய்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் 4வது முறையாக வேளாண்நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை, இது வரலாற்றுச் சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை என்று பாராட்டியுள்ளார்.
“விவசாயிகளிடம் இருந்து கொப்பரை தேங்காய்களை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை. நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் கொடுப்பது தொடர்பாக விவசாயிகள் விடுத்த கோரிக்கை நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான தொடர்ந்து பேரவையில் விவாதம் நடைபெறும்,” என்றார் செல்வப்பெருந்தகை
நீரிழிவு நோயை எதிர்த்துப் போராட உதவும் பாரம்பரிய நெல் வகைகளை ஊக்குவிக்கும் வகையில் விதை விநியோகத்தை நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பசுந்தாள் உரம், நுண்ணுயிர்கள், மண்புழு உரம் ஆகியவற்றின் பயன்பாட்டினை அதிகரித்து மண் வளத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட புதிய முயற்சிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.
விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீடு வழங்க ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார் அவர். இயற்கைச் சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பிலிருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்துகிறது என்றும் கூறினார்.
சிறுதானிய இயக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு
ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறுதானியங்களின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கெனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
2023 2024ஆம் ஆண்டு முதல் 2027-2028ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு சிறுதானிய இயக்கம் இரண்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும். 2024-2025 ஆண்டிலும் 65 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
தொடர்புடைய செய்திகள்
ராமதாஸ்: ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை
தமிழக வேளாண் பட்ஜெட் உழவர்களுக்கு ஏற்றம் அல்ல; ஏமாற்றம் தரும் அறிக்கை என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். விளைபொருள்களுக்கு உரிய விலை வழங்கப்பட வேண்டும் என்ற உழவர்களின் முதன்மை எதிர்பார்ப்பு இந்த ஆண்டும் நிறைவேறவில்லை. உழவர்களின் வருவாயைப் பெருக்கவோ, பாசனப் பரப்பை அதிகரிக்கவோ எத்திட்டமும் இடம்பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்டாலின்: மண்வளம் முதல் மக்கள் நலம் வரை
மண்வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள அமைச்சர் பன்னீர்செல்வத்தை தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார்.