சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, கேரளா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் கட்சிக்குப் பானை சின்னத்தை முன்கூட்டியே ஒதுக்கித்தர வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
தங்கள் கட்சிக்கு பொதுச்சின்னம் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் அண்மைக்காலமாக தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் ஆளுங்கட்சியின் தலையீடு இருப்பது போன்ற பிம்பம் உருவாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“தேர்தல் ஆணையம் ஒரு தன்னாட்சி அமைப்பு. அது சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் பாகுபாடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்றும் விரும்புகிறோம்.
“கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆறு தொகுதிகளிலும் பானை சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிட்டோம். அப்போது திமுக எங்களுக்கு எந்தவித நெருக்கடியையும் தரவில்லை. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் வேறு கருத்தை முன்வைத்தது உண்மை.
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை நசுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக செயல்படவில்லை,” என்றார் திருமாவளவன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் தங்களுக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதே அடிப்படையில் தற்போது நாடாளுமன்றத் தேர்தலில் பொதுதொகுதி ஒன்றை கேட்பதாகத் தெரிவித்தார்.
எதிர்வரும் தேர்தலில் ஐந்து தென்னிந்திய மாநிலங்களிலும் விசிக சார்பில் வேட்பாளர்கள் களமிறக்கப்படுவர் என்றும் திருமாவளவன் கூறினார்.

