சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், தூத்துக்குடியில் விண்வெளிப் பூங்கா அமைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுமார் இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்தப் பூங்கா அமைய உள்ளது.
அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்பதன் பலனாய் இந்தப் பூங்கா தமிழகத்துக்குக் கிடைத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்துடன், அதன் அருகிலேயே சிறிய அளவிலான செயற்கைக் கோள்களை உருவாக்கும் நிலையத்தையும் ஏற்படுத்தினால், குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த முடியும் என்று தாம் எழுதியுள்ள ‘இந்தியா 75’ என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார் மயில்சாமி அண்ணாதுரை.
மேலும், ‘தமிழகத்தில் விண்வெளிப்பூங்கா’ என்ற தலைப்பில் “தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பம் 2030ன் தொடர் முயற்சியில் உச்சக்கட்ட அறிவியல் தொழில்நுட்பங்களை இணைக்க முடிந்தால், இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில்கூட தமிழகம் ஒரு முன்னணி இடத்தைப் பெற முடியும்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை ஏவுவதற்கான விண்வெளித் தளத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் இஸ்ரோ நிறுவனம் தற்போது உருவாக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தூத்துக்குடியில் விண்வெளி சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும் விதமாக இரண்டாயிரம் ஏக்கரில் ஒரு ‘விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா’ அமைக்கப்படும் என்றும் நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது.
இதை மயில்சாமி அண்ணாதுரை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக கோரிக்கையை தாம் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதாக பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“குலசேகரப்பட்டினத்தில் புதிய ஏவுதளத்தையும் அதற்கு அருகிலேயே சிறிய ஏவுகலன்கள், செயற்கைக் கோள்களை தயாரிக்கும் ஒரு நிலையத்தையும் சிக்கனமாக உருவாக்கினால், உலகிலேயே மிகக் குறைந்த செலவில் செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் வாய்ப்பை இந்தியாவால் பெற முடியும்.
தொடர்புடைய செய்திகள்
இதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படும். நமது தமிழ் மண்ணுக்குப் பெரும் வருவாயையும் கொண்டுவர முடியும்.
“அந்த வகையில் தமிழக நிதிநிலை அறிக்கையில் தூத்துக்குடியில் 2 ஆயிரம் ஏக்கரில் அறிவிக்கப்பட்டுள்ள விண்வெளிப் பூங்கா, ‘கேளுங்கள் கொடுக்கப்படும்’ என்பதன் பலனாய் கிடைத்துள்ளது,” என மயில்சாமி அண்ணாதுரை மேலும் தெரிவித்துள்ளார்.
குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை இம்மாதம் 28ஆம் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார்.