வேலைவாய்ப்பு: 3,000 இளையர்களிடம் விசா விண்ணப்பம் பெற்ற பிரிட்டிஷ் தூதரகம்

1 mins read
16ff5bc3-d216-4b80-8c91-c3bb8f0b63d3
ராஜ கண்ணப்பன். - படம்: ஊடகம்

சென்னை: கல்வித்துறைக்கு என தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் முன்மாதிரியாக உள்ளது என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்துடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ள இளம் தொழில்முறை திட்டத்தின் மூலம் இந்திய இளையர்கள் பிரிட்டன் சென்று இரண்டு ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பைப் பெறலாம் என்று அவர் கூறியுள்ளார்.

இளம் தொழில்முறை திட்டத்தின் கீழ் 18 முதல் 30 வயது வரை உள்ள 3,000 இளையர்களிடம் விசா விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பிரிட்டிஷ் தூதர் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கண்ணப்பன், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் படித்து பின்னர் உயர்கல்வி பயிலும் மூன்று லட்சம் மாணவிகளுக்கு மாதாந்தர உதவித் தொகையாக 1000 ரூபாய் வழங்கப்படுவதாக அவர் கூறினார்.

“அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் 1000 ரூபாய் வழங்கப்படும். உயர்கல்வியில் தொழில்முறை படிப்புகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீகிதம் இட ஒதுக்கிடு அமலில் உள்ளது.

இத்தகைய திட்டங்களால் தமிழகம் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறது,” என்றும் ராஜ கண்ணப்பன் மேலும் கூறினார்.