தமிழகத்தில் மீண்டும் உயர்ந்தது அரிசி விலை

தமிழகத்தில் மீண்டும் உயர்ந்தது அரிசி விலை

2 mins read
3f25e3a5-eb3a-421f-a45b-5545e2f106ca
உணவகங்களில் இட்லி, தோசை விலை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் அரிசி விலை அதிகரித்துள்ளது. இதையடுத்து உணவகங்களில் விற்கப்படும் அரிசி சார்ந்த உணவுப் பொருள்களின் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் குறுவை, சம்பா, காலடி பருவங்களில் 15 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி மேற்கொள்வர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை நம்பி இருந்தபோது போதுமான மழை பெய்யவில்லை. இதனால் கடந்த அக்டோபர் மாதத்திலேயே தண்ணீர் வரத்து இன்றி மேட்டுர் அணை மூடப்பட்டது.

இதேபோல் சம்பா சாகுபடியின்போதும் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், அரிசி விளைச்சல் சரிவு கண்டது. தமிழக அரசு உடனடி நடவடிக்கை மேற்கொண்டு கர்நாடகா, ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அரிசியை வாங்கி நிலைமையை சமாளித்தது.

எனினும், குறிப்பிட்ட மாநிலங்கள் அரிசி விலையை உயர்த்திவிட்டன. இதனால் தமிழகத்தில் கடந்த நான்கு மாதங்களாகவே அரிசி விலை சீராக அதிகரித்து வந்தது.

சென்னை உள்ளிட்ட பல்வேறு தமிழக நகரங்களில் ஒரு கிலோ புழுங்கல் அரிசி 8 ரூபாய் அதிகரித்து ரூ.68 க்கு விற்கப்படுகிறது.

இட்லி அரிசியின் விலை கிலோவுக்கு மூன்று ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் அண்மைய நாள்களாக சில்லரை விற்பனையில் அரிசியின் விலை கிலோவுக்கு 18 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாக மாலை மலர் ஊடகச் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

இதனால் உணவகங்களில் விற்கப்பட்டும் இட்லி, தோசை ஆகியவற்றின் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஒன் இந்தியா ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே சென்னையில் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாகவே அரிசி விலை மெல்ல அதிகரித்து வந்ததாக அவர்கள் கவலையுடன் சுட்டிக் காட்டுகின்றனர்.

அடுத்த மூன்று மாதங்களுக்கு அரிசி விலை உயர்ந்தே காணப்படும் என வியாபாரிகள் கூறியதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.

எனினும் நியாய விலைக் கடைகள் மூலம் பொதுமக்களுக்கான அரிசி விநியோகம் தங்குதடையின்றி நடைபெறும் என்றும் இதற்கு போதிய அளவில் அரிசி கையிருப்பில் உள்ளது என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்