தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிரானவர்கள் அல்ல: முதல்வர் விளக்கம்

2 mins read
46be7acc-5dff-4a0f-8448-b6cd5d957216
ஜி.கே.மணி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

சென்னை: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர்கள் பேசிய பின்னர், அவர்களுக்குப் பதிலளித்த அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகத்தான் தமிழக அரசு செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

வியாழக்கிழமையன்று சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசுதான் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக பாமக உறுப்பினர்கள் முன்வைத்த கருத்துகளை தமிழக முதல்வர் உறுதி செய்திருப்பதாகவும் பேரவைத் தலைவர் அப்பாவு குறிப்பிட்டார்.

இதையடுத்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “சாதி வாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. உங்களுக்கு சாதகமாகத்தான் நாங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்,” என்று விளக்கம் அளித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜிகே. மணி, அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம்மை நேரில் சந்தித்து சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பேசியதாகக் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், அந்தச் சந்திப்புகளின்போது அவர்களுக்குத் தாம் விளக்கமாக பதில் சொல்லி இருப்பதாகக் கூறினார்.

இப்போது பேரவையிலும் அதுதான் நடந்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர், இந்தக் கணக்கெடுப்பு குறித்து ஏற்கெனவே பேரவையில் பேசப்பட்டுள்ளது என்றும் நிதிநிலை அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் பேச வாய்ப்பளிக்க வேண்டும் என்று பாமக உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதற்கு அனுமதி அளிக்கப்படாததால் அவர்கள் வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக சட்டப்பேரவைத் தலைவர் ஜி.கே.மணி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசுக்கு மட்டும் அல்லாமல் ஊராட்சி மன்றத் தலைவர் உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூட அதிகாரம் உண்டு என்றார்.

“அனைத்து சாதி அமைப்புகளும் இதைத்தான் வலியுறுத்துகின்றன. வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களைக் கண்டறிய சாதி வாரி கணக்கெடுப்பு முக்கியம்,” என்றார் ஜி.கே.மணி.

குறிப்புச் சொற்கள்