தமிழகம் வரும் மோடி; ஸ்டாலினுடன் ஒரே மேடையில் பேசுகிறார்

1 mins read
2a6134dd-967a-45d0-9d7e-49e43ae8f5cb
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். - கோப்புப் படம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வரும் பிப்ரவரி 27, 28 தேதிகளில் தமிழகத்தில் திருப்பூர், கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

பிப்ரவரி 27ஆம் தேதி டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்து பின்னர் அங்கிருந்து தனி விமானத்தில் கோவை வழியாக திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு வருகை தர உள்ளார்.

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினத்தில் 2,233 ஏக்கரில் இஸ்ரோ சார்பில் இந்தியாவின் இரண்டாவது ஏவுகணை (ராக்கெட்) ஏவுதளம் அமைய இருக்கிறது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா 28ஆம் தேதி பகல் 11 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் நடைபெறுகிறது.

ஏவுகணை ஏவுதளம் அமையும் பகுதி காற்றின் வேகம் அதிகம் இல்லாத இடமாகவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாத பகுதியாகவும் இருக்க வேண்டும். புயல், மின்னல் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்படாத பகுதியாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில், நிலையான கால நிலை கொண்ட குலசேகரன்பட்டினத்தில் ஏவுகணை ஏவுதளம் அமைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. குலசேகரன்பட்டினம் ஏவுகணை ஏவுதளம் அமைக்கும் பணி, வஉசி துறைமுக விரிவாக்கப் பணி உள்ளிட்ட பணிகளை மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்க இருக்கிறார். ஒரே மேடையில் பிரதமர் நரேந்திர மோடியும் முதல்வர் மு.க. ஸ்டாலினும் பங்கேற்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்