தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு திரிஷா நோட்டீஸ்

1 mins read
aad15e21-bde8-4c67-ba5c-c1439b0360a7
நடிகை திரிஷா, ஏ.வி.ராஜூ - படம்: இணையம்

சென்னை: நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகிக்கு நடிகை திரிஷா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், ‘24 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து யூடியூப் பேட்டி ஒன்றில் பேசிய ஏ.வி.ராஜூ, கூவத்தூர் சம்பவம் குறித்து சில சர்ச்சையான கருத்துகளை பகிர்ந்தார். அதில் நடிகை திரிஷா குறித்து பேசிய கருத்துகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அவர் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து திரையுலகைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, நடிகை திரிஷா தனது எக்ஸ் தள பக்கத்தில், “இனிமேல் சட்டரீதியாகத்தான் எல்லாவற்றையும் சொல்லப்போகிறேன்” என்று கொந்தளிப்புடன் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து காணொளிவெளியிட்ட ஏ.வி.ராஜூ, அதில் தான் பேசியது தவறாக சித்திரிக்கப்பட்டதாகவும், திரிஷாவிடம் மன்னிப்புக்கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில், ஏ.வி.ராஜூவுக்கு திரிஷாவின் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அடுத்த 24 மணி நேரத்துக்குள் திரிஷா குறித்து இணையத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், சமூக வலைத்தளங்களில் வீடியோ மற்றும் எழுத்து வடிவில் இருக்கும் அத்தனை அவதூறுகளையும் நீக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் அடுத்த நான்கு நாட்களுக்குள் இதுகுறித்து பதில் அளிக்குமாறும், திரிஷாவுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்