சென்னை: நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை பிப்ரவரி 2ஆம் தேதி அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் ஆகியன அறிவிக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.
விஜய் கட்சி தொடங்கியுள்ள நிலையில், கட்சியின் அடிப்படை கட்டமைப்பை உருவாக்குவது, பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் விஜய் விரைவில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரைச் சந்திக்க உள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பிரசாந்த் கிஷோர், “விஜய் என்னை இதுவரை அணுகவில்லை. ஆனால் அவர் உதவி கேட்டால் செய்வேன்.
“என்னை மதித்து வருபவர்களுக்கு என்னால் முடிந்த அரசியல் ஆலோசனை கொடுப்பேன். ஆனால் விஜய் விரும்பிக் கேட்டாலும் அவருக்கு முழு நேர அரசியல் ஆலோசகராக மாட்டேன்,” என்று தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளை 100 மாவட்டங்களாகப் பிரித்து பொறுப்புகள் வழங்க விஜய் முடிவு செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் குறித்த அறிவிப்பு 10 நாள்களுக்குள் வெளியாகும் என்றும் பொறுப்பாளர்கள் நியமனத்திற்கு பிறகு உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு செயலியும் விரைவில் அறிமுகமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
உறுப்பினர் சேர்ப்புச் செயலி: நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி மூலமாக, உறுப்பினர் சேர்க்கை முகாம்களை ஒருங்கிணைக்க வேண்டும். கட்சியில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் த.வெ.க.வின் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தினார்.