தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழ்நாடு நெடுஞ்சாலை ஆணையம் உருவாகிறது

2 mins read
bf534e47-f2e3-4525-8f1e-4a04657d3a2f
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தைத் தொடர்ந்து, கடந்த புதன் கிழமை 12 சட்டமுன்வடிவுகள் பல்வேறு துறை அமைச்சர்களால் அறிமுகம் செய்யப்பட்டன. - படம்: ஊடகம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தைத் தொடர்ந்து, கடந்த புதன் கிழமை 12 சட்டமுன்வடிவுகள் பல்வேறு துறை அமைச்சர்களால் அறிமுகம் செய்யப்பட்டன.

கடந்தாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி, சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டபடி, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போன்று, பொது மற்றும் தனியார்துறை பங்களிப்பில், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை நிறுவுவதற்கான சட்டமுன்வடிவையும் அவர் அறிமுகம் செய்தார்.

நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, தரம் மேம்பாடு, பன்னாட்டு நிதியைக் கொண்டுவருவதற்கான மாதிரிகளை உருவாக்குவது இந்த ஆணையத்தின் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆணையத்துக்கு ஒரு தலைவர், 3 முழுநேர, 3 பகுதிநேர உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு நெடுஞ்சாலை சட்டத்தில், மாநில நெடுஞ்சாலைகள் அமைப்பு, நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்பு ஆகியவற்றுக்கு பதில் மாநில தலைமை நிர்வாகி, நிர்வாகிகள் என மாற்றுவதற்கான சட்டத்திருத்த முன்வடிவை அமைச்சர் எ.வ.வேலு அறிமுகம் செய்தார்.

சென்னைப் போக்குவரத்துச் சிக்கலுக்குத் தீர்வு

சென்னை ஒருங்கிணைந்த மாநகர போக்குவரத்து அதிகார அமைப்பு (கும்டா)சட்டத்திருத்த முன்வடிவை வீட்டுவசதி அமைச்சர் சு.முத்துசாமி அறிமுகம் செய்தார். இந்த சட்டத்திருத்தம், சென்னையில் போக்குவரத்துச் சிக்கல்களைத் தீர்க்கவும், கும்டா அதிகார அமைப்பை மாற்றியமைக்கவும், அதிகார அமைப்பின் பங்கை மேம்படுத்தவும் வழிவகை செய்கிறது. இந்த அதிகார அமைப்பின் தலைவராக முதல்வர் செயல்படுவார்.

சுற்றுச்சூழல் சட்டத்தில் திருத்தம்

மேலும், ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்ட முன்முடிவை ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார்.

மாநில அவசரச் செலவு நிதி அதிகரிப்பு

அரசாங்கக் கொள்முதலில் ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப் புள்ளிகளுக்கான சட்டத்திருத்த முன்வடிவு, மாநிலத்தின் அவசர செலவுக்கான நிதியை ரூ.150 கோடியில் இருந்து ரூ.500 கோடியாக உயர்த்த சட்டத் திருத்த முன்வடிவு, உற்பத்தி நிதிப் பற்றாக்குறையை 3 விழுக்காடு வரை குறைக்கும் வகையில் நிதிநிலை நிர்வாக பொறுப்புடைமை சட்டத்தில் திருத்தம் செய்ய ஏதுவான சட்டமுன்வடிவு போன்றவற்றை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்தார்.

தமிழ்நாடு மாநில மருத்துவ மன்றம்

தமிழ்நாடு மருத்துவ பதிவுச்சட்டத்தை நீக்கி, தமிழ்நாடு மாநில மருத்துவ மன்றத்தை உருவாக்குவதற்கான சட்டமுன்வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்தார். இந்த சட்ட முன்வடிவை அறிமுக நிலையிலேயே எதிர்ப்பதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அறநிலையத்துறையில் மாற்றம்

அறநிலையத் துறை கோயில்களுக்கான அறங்காவலர்களாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களையும் நியமிக்கும் வகையிலான சட்டத்திருத்தத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிமுகம் செய்தார்.

ஆதிதிராவிடர் மேம்பாட்டுத் திட்டம்

ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்டம் தயாரித்தல், ஒப்புதல்செய்தல், கண்காணித்தல் ஆகியவற்றுக்காக ஒரு சட்டத்தை உருவாக்குவதற்கான சட்ட முன்வடிவை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் அறிமுகம் செய்தார்.

இந்த 12 சட்ட முன்வடிவுகளும் சட்டப்பேரவை கூட்டத்தில், பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன.

குறிப்புச் சொற்கள்