தமிழக மீனவருக்கு இலங்கையில் 6 மாதச் சிறை

தமிழக மீனவருக்கு இலங்கையில் 6 மாதச் சிறை

2 mins read
66028111-26a3-482d-b5bc-007c54eaf105
இலங்கைக் கடற்படையினரால் தமிழ் நாட்டு மீனவர்கள் கைதுசெய்யப்படுவதைக் கண்டித்து ராமேசுவரத்தில் மீனவர்கள் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். - கோப்புப்படம்: ஊடகம்

கொழும்பு: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் ஜான்சன் என்பவருக்கு 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 18 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையில், மீன்பிடிப் படகு ஓட்டுநராக ஜான்சனுக்கு இலங்கை 6 மாதச் சிறைத் தண்டனை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர் ஜான்சன் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே தமிழக மீனவர்கள் மூன்று பேருக்கு இலங்கை ஊர்க்காவல் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இப்போது மேலும் ஒரு மீனவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினரால் இதுவரை 150 நவீன மீன்பிடிப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய பாஜக அரசுக்கு பல்வேறு மீனவ அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன.

கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு அவர்களுடைய 2 விசைப்படகுகளையும் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்ட 20 மீனவர்களை மட்டும் விடுதலை செய்து, விசைப்படகுகளின் ஓட்டுநர்கள் இரண்டு பேருக்கும் தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 2வது முறையாக எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைக் கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

2023ஆம் ஆண்டில் மட்டும் 240 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டில் பிப்ரவரி முதல் வாரத்திற்குள் 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்.

குறிப்புச் சொற்கள்