முதல்வர்: டிரில்லியன் டாலர் பொருளியலே முதல் இலக்கு

முதல்வர்: டிரில்லியன் டாலர் பொருளியலே முதல் இலக்கு

3 mins read
17cbf393-ae0d-4c8a-96ba-146397425021
மு.க.ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதித் துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றியது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் டிரில்லியன் டாலர் பொருளியல் என்பதே தமிழக அரசின் முதல் இலக்கு என்றும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார்.

சென்னையில் வெள்ளிக்கிழமை (23.2.2024) அனைத்துலக அளவில் ‘உமேஜின்’ (Umagine TN 2024) என்னும் பெயரில் தகவல் தொழில்நுட்ப மாநாடு தொடங்கியுள்ளது.

தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பான ஆசியாவின் மாபெரும் மாநாடு, மார்ச் 23 முதல் 25ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது.

இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது அவர், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதித் துறையில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றியது ஏன் என்பது குறித்து விளக்கினார்.

“தகவல் தொழில்நுட்பத்தை முன்னிறுத்தி இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நான் பாராட்டுகிறேன். அவர் மூன்று தலைமுறையாக நாட்டுக்குத் தொண்டாற்றி வரும் குடும்பத்துக்குச் சொந்தக்காரர்.

“இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான திருச்சி என்ஐடியிலும், உலகின் தலைசிறந்த கல்வி நிறுவனமான எம்ஐடியிலும் கல்வி கற்றவர். பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் படித்து, வேலை பார்த்திருந்தாலும், அங்கேயே தங்கிவிடாமல் தமிழ்நாட்டுக்குவந்து, இங்கேயே தொழில் வர்த்தகம் என்று ஒதுங்கிவிடாமல் அவரின் தாத்தா, அப்பா போல் அரசியலில் பங்கெடுத்து தன்னுடைய அறிவாற்றலை தமிழ்நாட்டு மக்களுக்குத் தந்து வருகிறார் அமைச்சர் பிடிஆர்.

“திமுக ஆட்சியில் முதல் இரண்டு ஆண்டுகள் நிதி அமைச்சராக மிகச் சிறப்பாக செயல்பட்டு பல மாற்றங்களுக்கு வித்திட்டார் பிடிஆர். அவரை நான் தகவல் தொழில்நுட்பத் துறைக்கு மாற்றினேன். அவரை மாற்றியதற்குக் காரணம், இந்தத் துறையிலும், நிதித் துறை போல் நல்ல பல மாற்றங்கள் தேவைப்பட்டன.

அவரின் தலைமையில் தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பும் அதிகமாகும்.

“அவர் தான் ஏற்றுக்கொண்ட பொறுப்பில் செவ்வனே செயலாற்றி வருகிறார் என்பதற்கு இந்த மாநாடு ஒரு சிறந்த உதாரணம்,” என்று முதல்வர் ஸ்டாலின் பழனிவேல் தியாகராஜனை பாராட்டினார்.

உலகின் மனிதவள தலைநகரமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்ட முதல்வர், இதற்கு ஏதுவாக தமிழகத்தில் 750 திட்டங்கள் மின்னிலக்க மயமாக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

“எனக்கு இரண்டு கனவுகள் உள்ளன. ஒன்று, தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த வேண்டும். இரண்டு, உலகத்தின் மனிதவள தலைமையகமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும். அதற்கான முழு ஈடுபாட்டுடன் என்னை நானே அர்ப்பணித்துக்கொண்டு இருக்கிறேன்.

“தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியும் மாற்றமும்தான் திராவிட மாடல் ஆட்சியின் தனித்தன்மை. அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி 5ஜி அலைக்கற்றை அமைப்பை துரிதப்படுத்தினோம்.

“தொழில்நுட்பத்தில் உலக நாடுகள் எந்த வகையான முன்னேற்றத்தை அடைகிறதோ, அதே தொழில்நுட்ப வளர்ச்சியை அதே காலத்தில் உருவாக்க உழைப்போம்,” என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

மேலும் மாநாடு குறித்து முதல்வர் ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் “நாளைய புதுமைகளை வடிவமைக்கும் நோக்கிலான பல அறிவார்ந்த அமர்வுகளிலும், துறைசார் சான்றோர்கள் பங்குபெறும் கலந்துரை யாடல்களிலும் கலந்துகொண்டு பங்குபெறுங்கள். “Inform the present. Innovate the future” என்ற மையநோக்குடன் நடைபெறும் இந்த இரு நாள் மாநாட்டின் வழியே, முன்னேற்றத்தை விரைவாக முன்னகர்த்தும் முயற்சியில் கைகோப்போம்,” என்று பதிவிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டில், கோயம்புத்தூர், மதுரை ஆகிய பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களை உருவாக்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்