விமானநிலையத்தில் கிடந்த ரூ.7 கோடி மதிப்புள்ள கஞ்சா பெட்டி

2 mins read
066c7526-f188-4c6b-b042-4f861966cdd0
படம் - ஊடகம்

சென்னை: தாய்லாந்து நாட்டின் பேங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புள்ள 14 கிலோ உயர் ரக ’ஹைட்ரோபோனிக்’ கஞ்சா போதைப்பொருளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக புதுச்சேரி வாலிபர் ஒருவரை காவலர்கள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா போதைப்பொருளை வெளிநாடுகளில் வழக்கம்போல் மண்தரையில் வளர்க்காமல் அறைகளுக்குள் சிறிய பெட்டிக்குள் வைத்து வளர்க்கின்றனர்.

இரண்டு நாள்களுக்கு முன்பு இந்தோனீசிய பயணி ஒருவர் கடத்தி வந்த ஏறக்குறைய 15 கோடி ரூபாய் மதிப்பிலான கொக்கைன் போதைப்பொருளை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் அவரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், பேங்காக்கில் இருந்து சென்னைக்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக அந்நாட்டு சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை இரவு விழிப்பு நிலையில் இருந்தனர்.

அப்போது ‘கன்வேயர் பெல்டில்’ இருந்து ஒரு பெட்டி மட்டும் எடுத்துச் செல்லப்படாமல் இருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே உயர்ரக 14 கிலோ எடை கொண்ட ‘ஹைட்ரோபோனிக்’ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

கஞ்சா பெட்டி புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பயணியுடையது என்பது தெரியவந்துள்ளது. தன்னைப் பிடிப்பதற்காக சுங்கத்துறை அதிகாரிகள் தயாராக இருப்பதை அறிந்த அந்த ஆடவர் பெட்டியை விட்டுவிட்டு தப்பி ஓடி இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்