சென்னை: விளவங்கோடு காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பாஜகவில் இணைந்துள்ளார்.
இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
விளவங்கோடு எம்எல்ஏவாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் விஜயதாரணி. காங்கிரஸ் கட்சியில் பல முக்கிய பதவிகளை வகித்த அனுபவம் உள்ளவர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட விரும்பியபோது கட்சித் தலைமை அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை.
மேலும் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக தம்மை நியமிக்க வேண்டும் என விஜய தாரணி முன்வைத்த கோரிக்கையையும் கட்சித் தலைமை கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.
மேலும் இம்முறையும் கன்னியாகுமரி தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் தான் நிறுத்தப்படுவார் என தகவல் வெளியான நிலையில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் விஜயதாரணி.
தேர்தல் சமயத்தில் அவர் எடுத்துள்ள இந்த அதிரடி முடிவால் தமிழக காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்துள்ளது.