தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல்: பரிசீலிக்கப்படும் என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்

தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல்: பரிசீலிக்கப்படும் என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்

2 mins read
31f59b72-dba6-4bb5-8887-ecaaa929dc7e
ராஜீவ் குமார். - படம்: ஊடகம்

சென்னை: தமிழகத்தில் ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ‘சி-விஜில்’ (CVigil) என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

இச்செயலி மூலம் தெரிவிக்கப்படும் புகார்களின் மீது அடுத்த நூறு நிமிடங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

மக்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள தேர்தல் ஆணைய உயரதிகாரிகள் அடங்கிய குழு அனைத்து மாநிலங்களுக்கும் சென்று வருகிறது.

இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில், தேர்தல் ஆணையர் அருண் கோயல், துணை தேர்தல் ஆணையர்கள் உள்ள குழுவினர் கடந்த இரு நாள்களாக தமிழகத்தில் தீவிர ஆலோசனை, ஆய்வில் ஈடுபட்டனர்.

பின்னர் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக பல கட்சிகளாலும் முன்வைக்கப்பட்டது என்றார்.

அதேபோல் தேர்தலில் பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும், மது விநி யோகத்தைத் தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

தேர்தலை நியாயமாக, சுதந்திரமாக நடத்த வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார்.

“தமிழகத்தில் மொத்தம் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் பெண்கள் 3.15 கோடி பேர், ஆண்கள் 3.04 கோடி பேர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 8,294 பேர். பெண் வாக்காளர்களே இங்கு அதிகமாக உள்ளனர்.  துணை ராணுவப் படை கண்காணிப்பு உறுதிப்படுத்தப்படும்,” என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறினார்.

குறிப்புச் சொற்கள்