காஞ்சிபுரம்: பரந்தூர் தொகுதியில் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. இதனால் கொந்தளித்துப்போன அப்பகுதி மக்கள் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டக்குழு அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியதாகவும் நிலங்களை கையகப்படுத்த திறக்கப்பட்டுள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாகவும் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ தெரிவித்துள்ளார்.
“ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இடம் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அது விளைநிலங்கள் இல்லாத, யாரும் உரிமை கோராத பகுதியாகும். எனினும் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
“மொத்தமாக நிலம் எடுத்தால் மக்கள் போராட்டம் வெடிக்கும். இதை உணர்ந்து அதிகாரிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிலங்களை கையகப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்,” என்றார் இளங்கோ.
அடுத்தகட்ட போராட்டங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.