சென்னை: கடும் நிதி நெருக்கடி இருந்தாலும், தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.1,516 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை அவர் சனிக்கிழமை அன்று துவக்கிவைத்தார்.
நெம்மேலி பகுதியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் நாள்தோறும் 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் என்றார் முதல்வர்.
குறிப்பாக தென் சென்னையில் உள்ள ஒன்பது லட்சம் பேருக்கு இத்திட்டம் பயனளிக்கும் என்றும் இந்தியாவிலேயே ஆகப்பெரிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் நிறுவப்பட்ட மாநகரம் என்ற பெருமையை சென்னை மாநகரம் அடையும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
“நீர் இன்றி அமையாது உலகு. இதைவிட குடிநீரின் தேவையை யாராலும் விளக்கிச் சொல்லிவிட முடியாது. அதனால்தான், கடுமையான நிதி நெருக்கடி காலத்திலும், குடிநீர்த் திட்டங்களைத் தீட்டி வழங்கி வருகிறோம்,” என்றார் மு.க.ஸ்டாலின்.
இதற்கிடையே, ரூ.16,000 கோடியில் மின்சாரக் கார் தொழிற்சாலைக்கு தூத்துக்குடியில் முதல்வர் ஸ்டாலின் சனிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

