சென்னை: அம்ருத் பாரத் ரயில் நிலையம் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் உள்ள 34 ரயில் நிலையங்கள் உலகத்தரத்தில் மேம்படுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருந்தது.
ரயில் நிலைய வளாகங்கள், சுற்றுப்புறங்களைத் தூய்மையாகப் பராமரிப்பது, இலவச இணைய வசதி, மின்தூக்கி, நகரும் படிக்கட்டுகள், காத்திருப்பு அறைகள் என இந்த ரயில் நிலையங்களில் அனைத்து விதமான வசதிகளும் உலகத்தரத்தில் ஏற்படுத்தப்படும்.
இந்தச் சிறப்பு திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கி விட்டன.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 554 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
இவற்றுள் 32 ரயில் நிலையங்கள் தெற்கு ரயில்வே சார்பிலும், தர்மபுரி, ஓசூர் ஆகிய இரு நிலையங்கள் தென்மேற்கு ரயில்வே சார்பிலும் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை, பூங்கா, கிண்டி, மேட்டுப்பாளையம், ஈரோடு, திண்டுக்கல், தூத்துக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்கள் விரைவில் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக உருமாறும் என ரயில்வே அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

