சென்னை: பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்திருப்பதை அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனின் தந்தையான ஜி.கே.மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன் என்பது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தலைவர் ஜி.கே.வாசன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு ஆதரவளித்து கூட்டணியில் இணைந்ததாகக் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு, தமிழ்மொழி, தமிழர்களை மத்திய பாஜக அரசு விரும்புகிறது என்றும் அவர் கூறினார்.
விவசாயம், கல்வி, சுகாதாரம், தொழில்துறைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிப்பதாகவும் படித்தவர்களும், இளையர்களும் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
“பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொருளியில் ரீதியாக நாடு முன்னேற்றம் காணும், இதை உறுதியாக நம்புகிறேன். வாக்களித்த தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது,” என்றார் ஜி.கே.வாசன்.
தொகுதிப் பங்கீடு தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், பாஜக தலைமையிலான கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணைந்த பின்னர் தொகுதிப் பங்கீடு முழு வடிவம் பெறும் என்றார்.
வளமான இந்தியா உருவாக வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் அனைத்தும் பாஜக கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, அடுத்த 100 நாள்களுக்கு எங்களை வழிநடத்திச் செல்லும் ஒருவராக ஜி.கே.வாசன் இருக்கப்போகிறார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.