புதுடெல்லி: பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அறிந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“பாலாறு ஒரு பன்மாநில நதி ஆகும். 1,892ஆம் ஆண்டு மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி, பன்மாநிலங்களுக்கு இடையே பாயும் நதிகளில் பாலாறும் ஒன்றாகும்.
“1892ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தின்படி, மேற்பகுதியிலுள்ள மாநிலங்கள் கீழ்ப்பகுதியிலுள்ள மாநிலங்களின் முன் அனுமதி இல்லாமல், எந்த அணை கட்டுமானத்தையோ அல்லது நீரைத் தடுப்பதற்கான கட்டுமானத்தையோ அல்லது நீரைத் திருப்புவதற்கும், நீரைத் தேக்குவதற்கும் உரிய எந்த ஒரு செயலையும் மேற்கொள்ள முடியாது.
“இந்த ஒப்பந்தம் படுகை சம்பந்தப்பட்ட மாநிலங்களையும் கட்டுப்படுத்தும். மேலும், இந்த ஒப்பந்தம் செல்லுபடியாகும் என 16.02.2018 அன்று உச்சநீதிமன்றம் காவிரி சம்பந்தப்பட்ட பிரச்னையில் அளித்த தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
“இவ்வாறு இருக்கையில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு புதிய அணையை கட்ட முயல்வது 1892ஆம் ஆண்டின் ஒப்பந்தத்தை மீறுவதாகும். மேலும், உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு முற்றிலும் மாறுப்பட்ட செயலாகும். இது ஒரு தவறான முயற்சியாகும். மேலும், இதற்குமுன் சித்தூர் மாவட்டம் கணேஷபுரத்தில் ஆந்திர அரசு தன்னிச்சையாக ஒரு அணையை கட்ட முயன்றபோது அச்செயலை ஆட்சேபித்து தமிழ்நாடு அரசு 10.02.2006 அன்று உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. இவ்வழக்கில் இரு மாநில சாட்சியாளர்களது குறுக்கு விசாரணை 2018ல் முடிவடைந்தது. இவ்வழக்கின் இறுதி விசாரணை நடக்க உள்ளது.
“இதற்கிடையே, ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்து இருப்பதை எதிர்த்து ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
“இவ்வாறு இரண்டு அசல் வழக்குகளும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது தன்னிச்சையாக ஆந்திர அரசு பாலாற்றில் ஒரு புதிய அணையை கட்ட முயல்வதும், அதற்காக அதனுடைய நிதிநிலை அறிக்கையில் பணம் ஒதுக்கியிருப்பதும் முற்றிலும் உச்சநீதிமன்றத்தை அவமதிப்பதாகத்தான் கருத வேண்டும்,” என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

