கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு

கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவு

கோப்புப்படம்

27 Feb 2024 - 8:06 pm

2 mins read

மதுரை: கீழடியில் நடத்தப்பட்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய அரசுக்கு மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

“சிவகங்கை மாவட்டம், கீழடியில் 2013 முதல் 2016 வரை மத்திய அரசு சார்பில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அகழாய்வுப் பணியை மேற்கொண்டார். இந்த அகழாய்வின் போது 5,000க்கும் மேற்பட்ட பழைமை வாய்ந்த பொருள்கள் கிடைத்தன.

“இந்நிலையில், திடீரென அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் ஸ்ரீராமன் என்பவர் கீழடி தொல்லியல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவர் தலைமையில் நடைபெற்ற மூன்றாம் கட்ட அகழாய்வில் குறிப்பிடும்படியான கண்டுபிடிப்புகள் இல்லை.

“முதல் இரண்டு கட்ட கீழடி அகழாய்வு அறிக்கையை மத்திய அரசிடம் தொல்லியல் அறிஞர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில் கீழடியில் நிலவிய கலாசாரம், விவசாயம் செய்த பயிர்கள், விலங்குகள், நகர நாகரிகத்தை நோக்கி நகர்ந்த தன்மை குறித்து விரிவாக தெரிவித்துள்ளார்.

“ஆனால், அவரளித்த 82 பக்க அறிக்கையை மத்திய அரசு இன்னும் வெளியிடவில்லை. அதனை வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடர்பான தெளிவான வரலாற்று முடிவுகள் கிடைக்கும். எனவே கீழடியில் தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட முதல் இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிட உத்தரவிட வேண்டும்,” என்று திரு பாண்டியன் தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அம்மனு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர், “கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வுப் பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒன்பது மாதங்களில் அறிக்கை வெளியிடப்படும்,” என்று சொன்னார்.

அதனைத் தொடர்ந்து, கீழடி அகழாய்வு அறிக்கைகளை மத்திய அரசு ஒன்பது மாதங்களில் வெளியிட வேண்டும் என்று தலைமை நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

குறிப்புச் சொற்கள்