பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த மாதப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திவந்த ‘என் மண் என் மக்கள்’ பாத யாத்திரையின் நிறைவு விழா பல்லடம் மாதப்பூரில் செவ்வாய்க் கிழமை (27 பிப்ரவரி ) நடைபெற்றது.
இதில் பங்கேற்று பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
தமிழில் வணக்கம் கூறி அவர் உரையைத் தொடங்கினார்.
“தமிழ்மொழி மிகவும் பழமையானது. பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. தமிழக வளர்ச்சிக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. என் மனதுக்கு மிகவும் நெருக்கமான மொழி தமிழ்.
“திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு எதையும் செய்யவில்லை. எந்த வளர்ச்சியுமில்லை. மத்தியில் 10 ஆண்டுகள் கூட்டணியில் இருந்தும் திமுக எதையும் தமிழ்நாட்டிற்கு செய்யவில்லை.
“தமிழகம் வந்துள்ள நான் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜிஆர். அதனால்தான் அவர் இன்னமும் மக்களால் நினைத்து பார்க்கப்படுகிறார். அப்படிப்பட்ட எம்.ஜி.ஆரை அவமதிப்பது போல திமுக ஆட்சி நடைபெறுகிறது.
மேலும், “எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளார். ஜெயலலிதாவுடன் நட்புறவுடன் பழகியவன் என்ற முறையில் நான் கூறுகிறேன். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். தமிழகத்தில் கடைசி நல்லாட்சியை கொடுத்தவர் ஜெயலலிதாதான். அவருக்கு இந்த இடத்தில் நான் அஞ்சலி செலுத்துகிறேன்” என்று அவர் பேசியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கொடுக்கப்பட்டதைவிட தேசிய ஜனநாயக கூட்டணி மூன்று மடங்கு அதிக நிதி கொடுத்துள்ளது.
“இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இந்தியாவின் தலையெழுத்தை மாற்றும் வல்லமை தமிழகத்திற்கு உள்ளது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய மையமாக மாறியுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
“தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி இல்லாவிட்டாலும், பாஜகவின் இதயத்தில் தமிழ்நாடு உள்ளது,” என்று கூறிய திரு மோடி, உலகில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
மேடையில் மோடிக்கு எல்.முருகன், தோடர் பழங்குடியினர் தயாரித்த துண்டு ஒன்றை அணிவித்து கவுரவித்தார். தொடர்ந்து மோடிக்கு, ஜல்லிக்கட்டு காளை சிலை பரிசாக அண்ணாமலை வழங்கினார். தொடர்ந்து கூட்டணி கட்சியினர் மஞ்சள் மாலை அணிவித்தனர்.
வருகிற 4ஆம் தேதி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வரும் அவர், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக பா.ஜ.க தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சென்னை விமான நிலையத்திலிருந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு அவர் ஹெலிகாப்டரில் வருவதால் அங்கு ஹெலிகாப்டர் தளம் அமைக்கப்படுகிறது.
மூன்று மணியளவில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார்.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி அடிக்கடி வருவது பா.ஜ,கவினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

