சென்னை: ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக தலைவர்கள் பலர் குரல் கொடுத்து வருகின்றனர். அவ்வகையில் இப்போது காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கர்நாடக மாநிலத்தின், நந்திமலையில் உற்பத்தியாகி ஆந்திர மாநிலம் வழியாக தமிழ்நாட்டிற்குள் நுழைகிறது பாலாறு.
இந்த ஆறு, கர்நாடகாவில் 93 கிலோமீட்டரும், ஆந்திராவில் 33 கிலோமீட்டரும் பாய்ந்தோடி வருகிறது. தமிழ்நாட்டில் தான் அதிக தொலைவான 222 கிலோ மீட்டருக்கு பாலாறு பாய்கிறது..
வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்கள் பாலாற்று நீரினால் பயன்பெறும் மாவட்டங்கள். இதன்மூலம் விவசாயம் மற்றும் குடிநீருக்கான முக்கிய ஆதாரமாக பாலாறு திகழ்கிறது.
ஆந்திர அரசு ஏற்கெனவே சிறிதும், பெரிதுமாக இதுவரை 22 தடுப்பணைகளை பாலாற்றுப் படுகையில் கட்டியுள்ளது. மேலும் தற்போது 23 வது தடுப்பணை கட்டுவதற்கு ரூ 215 கோடி ஒதுக்கி அம்மாநில அரசு ஒப்புதல் அளித்து, ஆந்திர மாநில முதல்வர் திரு ஜெகன்மோகன் ரெட்டி இதற்கான அடிக்கல் நாட்டியுள்ள செய்தி பேரதிர்ச்சியை தருகிறது.
இது தமிழக விவசாயிகளையும், மக்களையும் வஞ்சிக்கின்ற செயலாகும். பாலாற்று நீரை நம்பி விவசாயம் செய்து வரும் நமது விவசாயப்பெருமக்கள் அனைவரும் ஆந்திர அரசின் இந்த முடிவை மிகக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
அனைத்து நதிகளுடைய பாதுகாப்பும் மத்திய அரசின் கையில் உள்ளதால் பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட்டு ஆந்திர அரசு தடுப்பணை கட்டுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தொடர்ந்து தமிழகம் இந்த விவகாரத்தில் வஞ்சிக்கப்படுவதை தமிழ்நாடு காங்கிரஸ் ஒருபோதும் ஏற்காது.
ஆந்திராவின் செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு உச்ச நீதிமன்றத்திடம் உரிய தடையாணை பெறுவது மட்டுமே நிரந்தரத் தீர்வாக அமையும் என்பதே காங்கிரஸ் கமிட்டியின் கருத்து என்று திரு செல்வப் பெருந்தகை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.