விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம்

விரைவு அஞ்சல் மூலம் ஓட்டுநர் உரிமம்

1 mins read
d2fdda31-12d7-4484-928b-eedc086f4ed0
படம்: - தமிழ் முரசு
Google News Preferred Icon

சென்னை: தமிழகத்தில் இனி ஓட்டுநர் உரிமமும் பதிவுச்சான்றுகளும் விண்ணப்பதாரர்களுக்கு விரைவு அஞ்சல் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.

சென்னை கிண்டியில் ரூ.41.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய போக்குவரத்து ஆணையரகம் மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை (பிப்ரவரி 28) திறந்து வைத்தார்.

அத்துடன், பதிவுச்சான்று மற்றும் ஓட்டுநர் உரிமத்தை விரைவு அஞ்சல் மூலமாக அனுப்பும் புதிய சேவை முறையையும் அவர் தொடங்கிவைத்தார்.

இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள 91 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் 54 பகுதி அலுவலகங்களில் இருந்து ஒப்புதல் அளிக்கப்படும் பதிவுச் சான்றும் ஒட்டுநர் உரிமமும் இனி விரைவு அஞ்சல் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும் என்றும் நேரடியாக வழங்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்கள் இச்சேவையைப் பெறுவதற்கு தங்களது உண்மையான முகவரியையும் தங்களின் கைப்பேசி எண்ணையும் தங்களது ஒட்டுநர் உரிமம் மற்றும் பதிவுச்சான்று விண்ணப்பங்களில் தெளிவாக குறிப்பிடவேண்டும்.

‘வாகன்’ மற்றும் ‘சாரதி’ செயலிகளில் விண்ணப்பதாரர்கள் தங்களது முகவரியையும் கைப்பேசி எண்ணையும் தவறாகக் குறிப்பிட்டிருந்தால் பதிவுச்சான்றுகளும், ஒட்டுநர் உரிமங்களும் விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தகைய விண்ணப்பதாரர்கள் மீண்டும் ‘வாகன்’ மற்றும் ‘சாரதி’ செயலிகளில் தங்களது சரியான முகவரியையும் கைப்பேசி எண்ணையும் உள்ளீடு செய்து மீண்டும் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்புச் சொற்கள்