ரூ.2,000 கோடி போதைப்பொருள்: தமிழகம் செல்லும் டெல்லி அதிகாரிகள்

ரூ.2,000 கோடி போதைப்பொருள்: தமிழகம் செல்லும் டெல்லி அதிகாரிகள்

2 mins read
38b4ac9a-378e-483c-9e08-8c492157037e
பிடிபட்ட ஐவரும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியக் கடல் பகுதியில் சட்ட விரோதமாக போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் ஈரான் நாட்டில் இருந்து இந்தியக் கடல் பகுதிக்குள் புகுந்துள்ள கப்பல் ஒன்றில் ஏராளமான போதைப்பொருள்கள் கடத்தி வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், இந்தியக் கடற்படையில் உள்ள உணவு மற்றும் சுங்கப் பிரிவு, குஜராத் காவல்துறை ஆகியோர் கூட்டாக இணைந்து போதைப்பொருள் வேட்டையில் அதிரடியாக இறங்கினார்கள்.

இந்த அதிரடிச் சோதனையில் சுற்றுக்காவல் விமானம், போர்க்கப்பல் ஆகியவை கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டன.

குஜராத் கடல் பகுதியில் போதைப்பொருள்களை கடத்தி வந்த கப்பலை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். சோதனையில் கப்பலில் மூட்டை மூட்டையாக பதுக்கி கடத்தி எடுத்து வரப்பட்ட போதைப்பொருள்கள் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தன.

போதைப்பொருள்களை மொத்தமாக பறிமுதல் செய்த அதிகாரிகள், அது 3,300 கிலோ எடை கொண்டது எனக்கூறினர். இந்த போதைப்பொருள்களைக் கடத்தி வந்த வெளிநாட்டினர் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து செயற்கைக்கோள் கைப்பேசி ஒன்றும், 4 கைப்பேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட ஐவரும் அனைத்துலக போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள்.

கப்பலில் பிடிபட்ட 3,300 கிலோ போதைப்பொருள்களையும் தமிழகத்துக்கு முக்கியப் புள்ளி ஒருவருக்கு அனுப்பி வைக்க அவர்கள் திட்டமிட்டிருந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்தது.

சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட மீன்பிடிப் படகு மூலமாக இந்த போதைப்பொருள்கள் தமிழகத்துக்குக் கடத்தி வருவதற்கு கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவில் திட்டம் போட்டுச் செயல்பட்டுள்ளனர்.

இந்த போதைப்பொருள்கள் தமிழகத்துக்கு யாருக்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது? இந்த போதைப்பொருள்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்பதை கண்டுபிடிக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேல் விசாரணை நடத்துவதற்காக டெல்லியில் இருந்து அதிகாரிகள் விரைவில் சென்னைக்கு செல்ல உள்ளனர். அவர்கள் சென்னைக்கு வந்து விசாரணை நடத்திய பிறகு 3,300 கிலோ எடை கொண்ட இந்த ரூ.2,000 கோடி போதைப்பொருள்களும் தமிழகத்துக்கு யாருக்காக கடத்தி வரப்பட்டது என்பது அம்பலமாகும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்